சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மானிய கோரிக்கையில் ஆதிதிராவிடர் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு தகுந்தாற்போல் 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900, பழங்குடியினருக்கு 100 என மொத்தம் ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதில் விண்ணப்பிப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவசாய நிலம் நிலப்பட்டா அவர்களின் பெயர்களில் இருப்பவர் மட்டுமே இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனை தொடர்ந்து நிலத்தில் கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை www.tahdco.com, என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.