முருகனை இழிவுப்படுத்தியதாக நடிகர் யோகி பாபு மீது புகார்!

இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்ததாக நடிகர் யோகி பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் “காக்டெய்ல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து மக்கள் முன்னணி அமைப்பு சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் மயிலுக்கு பதிலாக கிளியைப் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், இதில் நடித்த நடிகர் யோகி பாபு மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், இந்து ஜனநாயக முன்னணியின் நிர்வாகி ஆனந்தன் என்பவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ” நடிகர் யோகி பாபு நடித்து வெளிவரவுள்ள காக்டெய்ல் திரைப்படத்தில், முருகன் வேடத்தில் யோகி பாபுவும், மயிலுக்கு பதிலாக கிளியையும் வைத்து, திரைப்படத்திற்கு காக்டெய்ல் எனவும் பெயர் வைத்திருப்பது தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்துவதாகும். எனவே, காமெடி நடிகர் யோகி பாபு மீதும், படத்தின் இயக்குநர் விஜய முருகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *