பொதுத் தேர்வு ரத்து – வரவேற்பு தெரிவித்த சூர்யா..!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று  அறிவித்தார். மேலும், ஏற்கனவே உள்ள பழைய முறையே தொடரும் எனவும் அவர் கூறியிருந்தார். அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திரையுலகினரும் இந்த விவகாரத்தில் அரசைப் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் சூர்யா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக நடிகர் சூர்யாவின் ட்விட்டர் பதிவில், படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்த்தியுள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத் தேர்வு என்பது தீர்வாகாது. 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *