அரசியலுக்கு அடுத்து அதிரடி! முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் பட டீஸரை வெளியிட்ட ராம்கோபால் வர்மா

அரசியல் படமான ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ படத்தின் ட்ரெயல்ரை வெளியிட்ட சில நாட்களில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்ற டேக்லைனுடன், அதிரடி மன்னன் என்ற போற்றப்பட்ட புரூஸ்லீ பிறந்தநாளன்று ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்ற தனது அடுத்த படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார் சர்ச்சை புகழ் இயக்குநர் ராம்கோபால் வர்மா

இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்று கூறி, ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்ற படத்தின் டீஸசரை ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. இவர் தெலுங்கிலுள்ள முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைக் கூறி, பிரச்னைக்குள் சிக்கி ரசிகர்களிடம் வறுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இவர், டாப் நடிகர்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி உட்பட சினிமாவைச் சேர்ந்த பலரையும் கடுமையாக விமர்சித்து வாங்கிக் கட்டிக்கொள்வார்.

ஒரு காலத்தில் நல்ல சினிமாக்களை கொடுப்பதில் மட்டுமே பெயர் பெற்றிருந்த இவர், தொடர் தோல்விகளை சந்தித்து, தற்போது மற்றவர்களின் படைப்புகளை விமர்சித்து வருகிறார்.இதுஒரு புறம் என்றாலும் அடுதடுத்து படங்களை இயக்கி வெளியிடும், சர்ச்சையை கிளப்பும் கதைப் பின்னணியில் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து, ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த என்டிஆர் வாழ்க்கையின் மறுபக்கத்தை அடிப்படையாகக் கொண்டு “லட்சுமியின் என்டிஆர்” படத்தை தெலுங்கில் இயக்கி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து ஆந்திர அரசியல் பிரபலங்களான சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை சித்தரித்து விஜயவாடா மற்றும் கடலோர ஆந்திரா பகுதி அரசியலை மையமாக வைத்து ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்டிலு’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இதன் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களுக்கு படம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து தற்போது ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ (Enter The Girl Dragon) என்ற படத்தை இயக்கியிருக்கும் இவர், இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்று குறிப்பிட்டு சுமார் 3 நிமடம் வரை ஓடக்கூடிய டீஸரை வெளியிட்டுள்ளார். இதில் கதையின் நாயகியாக பூஜா பாகல்கர் நடித்துள்ளார்.

புரூஸ்லீயை குருவாக போற்றும் பூஜா பாகல்கர் படத்தின் டீஸர் காட்சிகளில் கண்ணில் தோன்றுபவர்களையெல்லாம் பறந்து பறந்து அடித்து, துவைத்து அதிரடி காட்டுகிறார். இந்தப் படத்தை பிக் பீப்புள் – டைகர் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளது.

உலக அளவில் அதிரடி மன்னன் என்ற போற்றப்பட்ட புரூஸ்லீ பிறந்தநாளன்று இப்படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்தான் அரசியல் படமான ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ படத்தின் ட்ரெயல்ரை வெளியிட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. அதற்கான விவாதங்கள் முழுவதுமாக நிறைவுபெறாத நிலையில் ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்று தனது அடுத்த பட டீஸரை வெளியிட்டுள்ளார்.

இப்படி அடுத்தடுத்து படத்தின் டிரெய்லரை வெளீயிடும் ராம்கோபால் வர்மா இப்படங்களை எப்போது எடுக்கிறார் என்பது கண்டறியப்படாத ரகசியமாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *