விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி பகுதியில் ஆபித், முனிஸ் என்ற 2 வாலிபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் ஜனபட் சத்திரம் பகுதியில் கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பணி முடிந்தவுடன் இருசக்கர வாகனத்தில் இருவரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்டார்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கண்டெய்னர் லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஆபித் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் முனிஸ் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் கண்டெய்னர் லாரியை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பொன்னேரி பகுதியில் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதுபற்றி தகவலறிந்த பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபித்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.