தண்ணீர் லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் தச்சுத் தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த இருசக்கர வாகனத்தை திருமுல்லைவாயிலை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணி லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளனர். இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சந்தோஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக போரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.