இருசக்கர வாகனங்களின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்திலிருந்து எத்தனால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருநெல்வேலியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தர்மபுரியிலுள்ள கணவாய் பகுதி அருகே லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதனையடுத்து டேங்கர் லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் பொம்மிடி சேர்ந்த பீட்டர் சிபு என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவருடன் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பாபு, கவிராஜ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த பீட்டர் சிபுவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.