பீகாரில் ‘மாஸ்க்’ தயாரிக்கும் கைதிகள்… குவியும் பாராட்டுக்கள்!

பீகார் மத்திய சிறையில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக முகக்கவசங்களை மும்முரமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரசில் இருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாள வேண்டும் என அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி இருக்கின்றன. இதில் முக்கியமாக அனைவருமே மாஸ்க் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் முகக்கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. முகக்கவசம் கிடைக்கும் பல பகுதிகளில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் வியாபாரிகள் முகக்கவசங்களை பதுக்கி வைத்திருப்பதிலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மத்திய சிறை நிர்வாகம் கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த பணியில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தயாரிக்கின்ற முகக்கவசங்கள் அந்த சிறையில் உள்ள சக கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றது.

மேலும் இந்த சிறையின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் 9 கிளை சிறைகளுக்கும் இந்த முகக்கவசங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக சிறை துணை கண்காணிப்பாளர் சுனில் குமார் மவுரியா (sunil kumar maurya) தெரிவித்தார். சிறை கைதிகளின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பீகார் மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.