28 ஆண்டுகளுக்கு பிறகு… அபயா கொலை வழக்கில்… பரபரப்பு தீர்ப்பு..!!

கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில், பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரீ ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ கோர்ட் அறிவித்திருக்கிறது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் 19 வயதான சிஸ்டர் அபயா. ஐக்கரகுந்நு தாமஸ், லீலா அம்மா ஆகியோரின் மகள் பீனா என்ற சிஸ்டர் அபயா, கன்னியாஸ்திரி ஆகும் விருப்பத்தில் 1990-ல் அந்த கான்வென்டில் இணைந்தார். அவர் கோட்டயம் பி.சி.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.*

இந்நிலையில், 1992-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி பயஸ் டெந்த் கான்வென்ட் ஹாஸ்டல் கிச்சனுக்கு அருகில் உள்ள கிணற்றில் சிஸ்டர் அபயா பிணமாக மீட்கப்பட்டார். மர்மங்கள் நிறைந்த இந்த மரணம் குறித்து  போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அபயாவின் குடும்பத்தில் பலரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். எனவே அபயாவும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அதே சமயம் கான்வென்ட் ஃபிரிட்ஜ் அருகில் அபயாவின் ஒற்றைச் செருப்பு கிடந்திருக்கிறது. மற்றொரு செருப்பு கிணற்றுக்கு அருகில் கிடந்துள்ளது. பிரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்த பாட்டில் போன்றவை அங்கு கிடந்துள்ளது. பிரிட்ஜ் பாதி திறந்த நிலையிலும், பாத்திரங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததையும் பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.

மேலும் அபயாவின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்துதான் சிஸ்டர் அபயா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் காவல்துறையும், கிரைம் பிராஞ்ச் ஆகியவை விசாரணை நடத்தி இது தற்கொலை என சாதாரணமாக கூறியிருக்கிறார்கள். உள்ளூர் போலீஸார் 17 நாட்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கிரைம் பிராஞ்ச் வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தியது. கே.டி. மைக்கில் என்ற எஸ்.பி-யின் தலைமையில் ஒன்பது மாதம் நடந்த விசாரணையில், அபயாவின் செருப்பு, உடைகள் மற்றும் டயரி ஆகியவை அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பிறகு சிஸ்டர் அபயா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஜோமோன் புத்தன்புரா என்பவர் கோரிக்கை வைத்து தொடர்ந்து போராடினார். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. நீண்ட விசாரணை நடத்திய சி.பி.ஐ முடிவில், சிஸ்டர் அபயா கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர் என்பவர் அந்த கான்வென்டுக்குச் சென்று செஃபி என்ற கன்னியாஸ்திரியுடன் தொடர்பில் இருந்ததாகவும், இரவில் தண்ணீர் குடிக்கச் சென்ற அபயா அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. கோடாரியின் கைப்பிடியால் அபயாவை தாக்கி, கிணற்றில் வீசப்பட்டதாகவும், அதனால் அபயா மரணம் அடைந்ததாகவும் சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கன்னியாஸ்திரி அபயா கொலைச் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக திருடன் ஒருவர் இருந்துள்ளார். அபயா கொலை செய்யப்பட்ட அன்று, அதிகாலை 5 மணிக்கு இரண்டு பாதிரியார்களை கான்வென்டில் பார்த்ததாக திருடன் அடைக்கா ராஜூ என்பவர் சாட்சி கூறியுள்ளார். இதுதான் அபயா வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

இந்த வழக்கு திருவனந்தபுரம் சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நேற்று நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு ஒன்றை கூறியுள்ளது. அதில் சிஸ்டர் அபயா கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர், சிஸ்டர் செஃபி ஆகியோர் குற்றவாளிகள் எனவும் கோர்ட் கூறியுள்ளது. இன்று (டிச.23) இந்த வழக்கில் தண்டனை விபரம் தெரிவிக்கப்படும் எனவும் சி.பி.ஐ சிறப்பு கோர்ட் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து பாதர் தாமஸ் எம்.கோட்டூர் திருவனந்தபுரம் பூஜப்புரா சிறையிலும், சிஸ்டர் செஃபி அட்டக்குளங்கர மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாரதியார் தாமஸ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 6.5 அபராதமும், இரண்டாவது குற்றவாளியான கன்னியாஸ்திரி செவிக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5 லட்சம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.