நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அசாம் அரசு கோரிக்கை!!

நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி அசாம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று தொடர்பாகவும், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கடந்த வாரம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அதில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன. இந்த நிலையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு 4.0 குறித்து மே 18ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஊரடங்கில் சிறிது மாற்றம் ஏற்படும் என அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அசாம் மாநிலம் கோரிக்கை வைத்துள்ளது. அசாம் மாநிலத்தில் இதுவரை 87 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 39 பேர் குணமடைந்துள்ளனர். இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *