பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
அதன்பின் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தது. பேனர் வைத்தவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கேள்வியெழுப்ப, முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பரங்கிமலை போலீஸார் அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் (279, 304 a, 336) வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவான 308-ன் கீழ் பரங்கிமலை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஜெயகோபால் உறவினர் மேகநாதன் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சேர்த்துள்ளது.