ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இன்று காலை 11:40 மணியளவில் பயணிகள் ரயில் ஓன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி சின்னாபின்னமானதோடு மட்டுமில்லாமல் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை வெளியேறியது. இந்த கோர விபத்தில் 67 வயதான லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் 34-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.