ஆச்சரியம்… கொரோனாவை வென்ற 103 வயது மூதாட்டி.!

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 103 வயதான மூதாட்டி சிகிச்சை பெற்று பூரண நலமுடன் குணமாகி வீடு திருப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உருவான கொடிய கொரோனா உலகையே கதிகலங்க செய்து வருகின்றது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 9 ஆயிரரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது. ஆனால் இதில் பலியானவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் தான். ஆம், கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் முதியவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டால் பலியாக நேரிடும் என்றுதான் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ஈரானில் 103 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாவை வென்றுள்ளார். ஆம், அந்த மூதாட்டியை கொரோனா தாக்கியது. அவர், அதிர்ச்சியடைந்து போய் அப்படியே உட்கார்ந்து விடவில்லை. அங்குள்ள செம்னான் நகரில் இருக்கும் பல்கலைக்கழக மருத்துவமனையில்  அவர் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வார காலம் சிகிச்சை பெற்று வந்தார். அதில், அவர் பூரண நலம் பெற்றார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்த தகவலை அந்த மருத்துவமனையின் தலைவரான நாவித் தனாயி தெரிவித்தார்.

இதே போலதான்  ஈரானில் கெர்மான் நகரைச் சேர்ந்த 91 வயதான முதியவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருந்தது. இருப்பினும் தைரியத்துடன் கொரோனா வைரஸ் நோயை சந்தித்து, 3 நாட்கள் சிகிச்சையில் பூரண நலமுடன் மீண்டு வந்திருக்கிறார். ஈரானில் இதுவரை 1200க்கும்  மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.