சென்னையில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கும் செயல்முறையை மேலும் எளிமையாக்கவும், விரைவுபடுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, விண்ணப்பித்த நாளில் இருந்து சரியாக 27 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதியை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய காலக்கெடு அமலுக்கு வருவதன் மூலம், திட்ட அனுமதி பெறுவதில் நிலவி வந்த தேவையற்ற காலதாமதங்கள் தவிர்க்கப்பட்டு, தலைநகரில் கட்டுமானத் தொழில் மேலும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறையைத் தொய்வின்றிச் செயல்படுத்துவதற்காக அதிகாரிகளுக்குப் பிரத்யேக காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களின் கட்டுமான திட்ட அனுமதி கோரி ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்த நாளில் இருந்து, அடுத்த 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர்கள் நேரடியாகச் சென்று உரிய கள ஆய்வைமுழுமையாக முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் சுணக்கம் களையப்பட்டு, பொதுமக்கள் எவ்வித அலைச்சலுமின்றி குறித்த காலத்திற்குள் தங்களின் கட்டுமான அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.