தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்த அவர், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தனது தோள்பட்டை வலிக்காக அதே அரசு மருத்துவமனையிலேயே ஸ்கேன் செய்து, பிசியோதெரபி சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து அமைச்சர்களும் ஓய்வில்லாமல் மக்களுக்காக உழைத்து வருவதாகவும், பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளைத் தங்கள் வீட்டைப் போல தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த கால ஆட்சியைப் போல இல்லாமல், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக உள்ளார்கள் என்றும், நேர்மையாக வாக்களித்த மக்களுக்கு எளிய முறையிலான ஆட்சியை முதல்வர் விஜய் வழங்குவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசுப் பேருந்துகளின் பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
