கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 முதல் 78 வயது வரையிலான 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என மொத்தம் 9 பேர், பள்ளிச் சீருடை அணிந்து கைகளில் புத்தகப்பைகளுடன் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களாகச் சேர்ந்துள்ளனர்.
தங்களது பேரன், பேத்திகள் வயதுடைய குழந்தைகளுடன் வகுப்பறையில் அமர்ந்து அவர்கள் ஆர்வமாகப் பாடங்களைக் கற்கத் தொடங்கியுள்ளனர். பள்ளிக்குள் நுழைந்த இந்த முதிய ‘மாணவர்களை’ அங்கிருந்த ஆசிரியர்களும், பள்ளிச் சிறுவர்களும் மலர் மாலைகள் அணிவித்து, கைதட்டல்களுடன் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். “இனி நாங்கள் எங்கும் கட்டை விரல் ரேகை வைக்க மாட்டோம், சொந்தமாகப் பெயர் எழுதிப் பழகிக் கையெழுத்திடுவோம்” என்று இந்த முதியவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
கிராமப்புற முதியவர்கள் மத்தியில் எழுத்தறிவை மேம்படுத்தவும், அவர்களைக் ‘கையெழுத்து’ போட வைக்கவும் மாவட்டத் துணை கோட்ட நீதிபதியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இந்தத் தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளார். தனது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் முதியவர்கள் பலர் தங்களது அன்றாடத் தேவைகளுக்குக் கூட எழுதப் படிக்கத் தெரியாமல் அவதிப்படுவதைக் கண்டறிந்த அவர், இந்த விழிப்புணர்வுத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.
“கல்வி கற்க முடியாமல் எழுத்தறிவின்மையால் அவதிப்படும் முதியவர்களுக்கு முறையான கல்வி அளிப்பதே எங்களது முக்கிய நோக்கம்” என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கிராமப்புறங்களில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள இவரது இந்தச் செயலுக்குத் தற்போது நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
