கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இரு மொழிக் கொள்கை என்பது தங்களின் கொள்கை முடிவு எனத் தமிழகக் கல்வி அமைச்சர் கூறுவதை விமர்சித்த அவர், பொத்தாம் பொதுவாக முடிவுகளை எடுக்காமல் மாணவர்களின் நலன் கருதி நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்று முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அண்மைய தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய தமிழிசை, “நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது நடக்கவில்லை; திமுக தோற்க வேண்டும் என்பதே நடந்துள்ளது. தேர்தல் முடிவில் நாங்கள் மழையை எதிர்பார்த்தோம், ஆனால் சுனாமியே வந்துவிட்டது; இருப்பினும் இந்தத் தோல்வி எதிர்கால வெற்றிக்கான அடிப்படையாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சனாதனம் குறித்துச் சிலர் கூறும் கருத்துக்களை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும் என்றும், கிட்னி திருட்டு குறித்த குற்றச்சாட்டின் மீதான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆட்சியில் இருந்த பல பிரச்சினைகள் தற்போது மேலும் அதிகரித்துள்ளன என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மிகவும் மரியாதைக்குரிய முதலமைச்சரின் அறையிலேயே ‘ரீல்ஸ்’ எடுக்கப்பட்ட நிகழ்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் தனது அறையில் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போதே இப்படிப்பட்ட தேவையற்ற நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க விஜய் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
இறுதியாக, அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் கை கூப்பி விடைபெற்றுச் சென்றார்.
