ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மொகல்தூரு கிராமத்தில், சொத்து தகராறு காரணமாக வயதான தம்பதியை அவர்களின் மகனும் பேரன்களும் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மொகல்தூரு மண்டலத்தைச் சேர்ந்த கொப்பநாதி சூர்யநாராயணா மற்றும் அவரது மனைவி கஸ்தூரி ஆகிய இருவரிடமும், அவர்களின் மகன் முத்யாலா ராஜு மற்றும் அவனது இரண்டு மகன்கள் கடந்த சில நாட்களாகச் சொத்து கேட்டுத் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தகராறு முற்றியதில் முத்யாலா ராஜு தன் மகன்களான ராதாகிருஷ்ணா மற்றும் சேகருடன் சேர்ந்து, பெற்றோர் என்றும் பாராமல் இருவரையும் இரக்கமின்றித் தாக்கியுள்ளார். அவர்கள் முதியவர்களைக் காலால் உதைத்துக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வயதான தம்பதி, தற்போது நரசாபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்தியவர்கள் தங்களின் செயலை மறைப்பதற்காக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் அடித்து உடைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முதியவர்களின் மகள்களான பத்மாவதி மற்றும் லட்சுமி, காவல்துறை அதிகாரி அட்னான் நயீமிடம் தங்களது சகோதரன் மற்றும் மருமகன்கள் மீது புகார் அளித்தனர்.

“>

 

தங்களது பெற்றோரைக் கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.