பெங்களூருவில் அநாகரிகமான முறையில் வாகனத்தை ஓட்டி, சாலையை மறித்து நின்ற நபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தம்பதியினர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெங்களூருவின் ஹெசர கட்டா பிரதான சாலையில் பி. ரச்சனா என்ற பெண் கட்டிடக் கலைஞர், தனது கணவர் பரத்திற்கு காலை உணவு வழங்கிவிட்டு ரேஞ்ச் ரோவர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நடுரோட்டில் ஒரு வாகனம் வழியை மறித்து நின்றதால் ரச்சனா ஹாரன் அடித்து வழி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாகனத்தில் இருந்த நபர், ரச்சனாவின் கார் ஜன்னல் அருகே வந்து அவரது அனுமதியின்றி மொபைலில் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ரச்சனா, உடனடியாகத் தனது கணவரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கணவர் பரத், ரச்சனாவின் புகைப்படங்களை மொபைலில் இருந்து நீக்குமாறு அந்த நபர்களிடம் கேட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த கும்பல், பரத்தை தரையில் தள்ளி மிகக் கொடூரமாகத் தாக்கியதோடு, அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்யவும் முயன்றுள்ளது.
இந்நிலையில் நல்லவேளையாக, ரச்சனா மூலம் எச்சரிக்கப்பட்டு அங்கு வந்த அவர்களது உறவினர்கள் பரத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மதுபோதையில் இந்த அராஜகத்தில் ஈடுபட்ட தாசேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த எம். மகேஷ் மற்றும் எம். கோவிந்தராஜு ஆகிய இருவரை கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
