மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் நாள்தோறும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகாலமாகப் புரையோடிப்போயுள்ள பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை அவர் உன்னிப்பாக ஆராய்ந்து சரிசெய்து வருவதாகவும் அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு துறை ரீதியாகவும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு நிர்வாகத்தை நெறிப்படுத்தி வருகிறார் என்றார். செய்தியாளர்களின் முக்கியக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழகப் பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
தவெக-வின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியான “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500” வழங்கும் திட்டம், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நிச்சயம் செயல்படுத்தப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மகளிர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
