தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வரலாற்றிலேயே இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயர்களை நீக்குவதற்காகத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ‘எஸ்.ஐ.ஆர்.’ பணியே இந்த அதிகப்படியான வாக்குச் சதவிகிதத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கடந்த 10-ஆம் தேதி புதிய அரசை அமைத்தது.

இப்படிப் பரபரப்பாகத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சிலர் சென்னை விமான நிலையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலில் வாக்களித்துவிட்டு மீண்டும் தாங்கள் வாழும் நாடுகளுக்குத் திரும்புவதற்காக விமான நிலையம் வந்த இவர்களின் கைகளில் தேர்தல் மை இருப்பதைக் கண்டு குடியுரிமை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பிறகும், தங்களிடம் இருந்த பழைய இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்தது அம்பலமானது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்த 10 பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.