சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை வாங்குபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதேபோல் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவெகவினர் யாரும் அரசு டெண்டர் எடுக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவையே தங்களின் முதல் பணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், பூஜ்ஜிய ஊழல் முறையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இனி தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும்போது, புகாரைப் பெறும் அதிகாரியுடன் சேர்த்து அந்த நிகழ்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறையையும் அவர் தெரிவித்துள்ளார்.

வில்லிவாக்கம் பகுதியில் கல்லூரி இல்லாததால், வருவாய்த்துறை மூலம் இடம் கண்டறியப்பட்டு விரைவில் புதிய கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

தோல்வி விரக்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தங்களின் குறிக்கோள் சிறந்த நிர்வாகத்தை வழங்குவது மட்டுமே என்றும், முன்னாள் முதல்வர் அல்லது முன்னாள் அமைச்சர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தங்களது அரசு ஈடுபடாது என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.