வெளிநாடுகளில் வாழும் மற்றும் சுற்றுலா செல்லும் இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த இரண்டு வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று அமெரிக்காவின் அதிகப்படியான வாழ்க்கைச் செலவையும், மற்றொன்று தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் பாகுபாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

அமெரிக்காவில் வசிக்கும் அம்ரிதா சிங் என்ற இந்திய இளம்பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை சரி செய்ய 250 டாலர் (சுமார் ரூ. 21,000) செலவானதாகக் கூறி ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

“இந்தியாவில் இதே வேலைக்கு 500 முதல் 1,000 ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால் இங்கு கூலி மிக அதிகம்” என அவர் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த பல இந்தியர்கள், “அமெரிக்காவில் கூலி அதிகம் என்பதால் தான் மக்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்யப் பழகிக்கொள்கிறார்கள்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், அன்னபூர்ணா என்ற இந்திய சுற்றுலாப் பெண் லாவோஸ் நாட்டு விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்தைப் பகிர்ந்துள்ளார். கம்போடியா செல்வதற்காக ‘வியட்நாம் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் ஏறச் சென்றபோது, அவரிடம் 400 டாலர் ரொக்கம் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என ஊழியர்கள் பிடிவாதம் பிடித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

“என்னிடம் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பயண வரலாறு இருந்தும், இந்தியப் பயணி என்பதால் என்னை அவமதித்தனர். இதேபோல் ஒரு வெள்ளைக்காரப் பயணியிடம் அவர்கள் நடத்துவார்களா? இந்திய பாஸ்போர்ட்டை வைத்துப் பயணிக்கும்போது கூடுதல் சோதனைகளும், மரியாதையற்ற போக்கும் நீடிக்கிறது என அவர் ஆதங்கப்பட்டுள்ளார். மேலும் இந்த இரு சம்பவங்களும் வெளிநாடுகளில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்களைப் பிரதிபலிப்பதாக சமூக வலைதளவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.