தனது முன்னாள் காதலி மற்றும் அவரது 7 மாதப் பெண் குழந்தையைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான முறையில் கொலை செய்த ரேமண்ட் ஜான்சன் (52) என்பவருக்கு, ஓக்லஹோமா மாகாண சிறையில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம், ஓக்லஹோமாவின் துல்சா நகரில் வசித்து வந்த புரூக் விட்டேக்கர் (24) என்ற பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த ரேமண்ட் ஜான்சன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரேமண்ட், புரூக்கை சுத்தியலால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த புரூக், தனது 7 மாதக் குழந்தை கியாவையாவது விட்டுவிடுமாறு கதறியும், அதைப் பொருட்படுத்தாத ரேமண்ட், வீடு முழுவதும் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் தலைக்காயம் மற்றும் புகை மூட்டத்தினால் புரூக் உயிரிழந்தார். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை கியா, தீக்காயங்களால் துடிதுடித்து உயிரிழந்தது.
இந்தக் கொடூரக் கொலை வழக்கில் ரேமண்டிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கருணை மனு மீதான விசாரணையில், “நான் மாறிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்” என அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஓக்லஹோமா அட்டர்னி ஜெனரல் ஜென்ட்னர் டிரம்மண்ட், ரேமண்டை ஒரு “இரக்கமற்ற கொலைகாரன்” என்று கூறியதுடன் , அவரது கருணை மனுவை ஏகமனதாக நிராகரித்தார்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு புரூக்கின் மூத்த மகள் லோகன் க்ளெக் கூறுகையில், “இந்தத் தண்டனை எங்களது இழப்பை ஈடுகட்டாது என்றாலும், இனி இவனால் வேறு யாருக்கும் ஆபத்து ஏற்படாது என்பது எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது” எனத் தெரிவித்தார். ரேமண்ட் ஜான்சன் ஏற்கனவே 1996-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இந்த ஆண்டில் (2026) நிறைவேற்றப்பட்ட 11-வது மரண தண்டனை இதுவாகும்.
