சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகை பூஜா பானர்ஜி விரைவில் இரண்டாவது முறையாகத் தாயாகவுள்ளார். இதனை முன்னிட்டு அவருக்கு நடத்தப்பட்ட வளைகாப்பு விழா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது இரண்டாவது குழந்தையின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் பூஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில் பூஜாவிற்கு வளைகாப்பு விழா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பூஜாவின் கணவரும் நடிகருமான குணால் வர்மா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

தனது வளைகாப்பு விழாவின் அழகான தருணங்களை பூஜா பானர்ஜி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “இன்று எனது வளைகாப்பு விழா” என்று பதிவிட்டுள்ள அவர், ரசிகர்களிடம் ஆசியையும் அன்பையும் கோரியுள்ளார். அந்த வீடியோவில் பூஜா கையில் ஒரு சிறிய பொம்மையை வைத்திருந்தார். இதன் மூலம் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது யூடியூப் சேனல் மூலம் பூஜா வெளியிட்டார். இச்செய்தியை அவர் தனது கணவர் குணால் வர்மாவிடம் சொன்னபோது, அவர் உணர்ச்சிவசப்பட்டு பூஜாவைக் கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

படப்பிடிப்பின் போது பூஜாவும் குணாலும் சந்தித்துக் கொண்டனர். கடந்த 2020 ஏப்ரல் 15 அன்று ஊரடங்கு காலத்தில் இவர்கள் நீதிமன்றத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், முதல் குழந்தை பிறந்த பிறகு, 2021 நவம்பர் 15 அன்று கோவாவில் பெங்காலி முறைப்படி மீண்டும் ஒருமுறை கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டனர். குணாலுக்கு முன்பாக பூஜாவுக்கு 2004-ல் அருணாய் சக்ரவர்த்தியுடன் திருமணம் நடந்தது, ஆனால் 2013-ல் அவர்கள் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

2008-ஆம் ஆண்டு தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய பூஜா பானர்ஜி, ‘தேவோன் கே தேவ் மகாதேவ்’ தொடரில் பார்வதி தேவியாக நடித்துப் புகழ்பெற்றார். மேலும் பல தொடர்களிலும் நடித்துள்ளார். 2011-ல் ‘வீடுதேலுடு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், பல பெங்காலி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பூஜாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.