தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடலாக இசைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து வழக்கம்போல முதலில் இசைக்கப்படாதது தமிழ் உணர்வைப் புண்படுத்துவதாக அவர்கள் விமர்சித்த நிலையில், முதல்வர் விஜய்யின் விளக்கம் கேட்டு அழுத்தங்கள் அதிகரித்தன.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் த.வெ.க சார்பில் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு இருந்ததால், தவிர்க்க முடியாத சூழலில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த நடைமுறை தமிழகத்திற்கு ஒவ்வாதது என்றும், இனி வரும் காலங்களில் பழைய நடைமுறைப்படியே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மாநில மொழிப் பாடல்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
