அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் இருந்தாலும், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் இன்னும் பதற்றம் குறையவில்லை. இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தென் கொரிய சரக்கு கப்பல்கள் உட்பட சில நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தில் தென் கொரியா இணைய வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்ட அவர், ஹோர்முஸ் பகுதியில் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அமெரிக்கக் கப்பல்களை ஈரான் தாக்கினால், அந்த நாடு பூமியின் முகத்திலிருந்தே துடைத்தெறியப்படும் என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானின் ஏழு சிறிய படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், தென் கொரிய கப்பலைத் தவிர வேறு எந்தக் கப்பலுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா தீவிரமாக இருப்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த மோதல் போக்கு சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.