மத்திய ஆப்பிரிக்க நாடான சாடில் நிலம், தண்ணீர் மற்றும் கால்நடைகளை மேய்ப்பது தொடர்பாகப் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக மோதல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, நில உரிமையாளர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே அடிக்கடி வன்முறை வெடிக்கிறது.

அந்த வகையில், அந்நாட்டின் வடிபிரா மாகாணத்தில் உள்ள ஐகொடி கிராமத்தில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு, தற்போது பெரும் கலவரமாக உருவெடுத்துள்ளது. இந்த மோதல் அண்டை கிராமங்களுக்கும் பரவிய நிலையில், இரு தரப்பினரும் துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், வன்முறையைத் தவிர்க்கவும் இரு தரப்பினரிடையே சமரசப் பேச்சுவார்த்தைக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.