தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் 87% வரை வாக்குகள் பதிவாகிப் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த அதீத வாக்குப்பதிவுக்குப் பின்னால் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) முக்கியக் காரணியாக இருந்ததா என்பது குறித்துப் பல தரப்பிலிருந்தும் கருத்துகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் பங்கேற்ற விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் இது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

​அதற்குப் பதிலளித்த அவர், “தமிழகத் தேர்தலில் அதிக வாக்குச் சதவீதம் பதிவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று முதலில் தெரிவித்தார். இருப்பினும், வாக்குப்பதிவு அதிகரிப்பிற்கு விஜய்தான் காரணமா? மற்றும் தவெக-வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என அடுத்தடுத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, “நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை” என்று ஒற்றை வரியில் பதிலளித்து அங்கிருந்து நகர்ந்தார். மகனின் அரசியல் பயணம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், SAC-யின் இந்த நிதானமான அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.