மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்றத்தில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நெகிழ்ச்சியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எட்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தனது கணவர் அளித்த சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் பிரிந்து சென்றார்.

கணவர் தனது மனைவியை மீட்டுத்தரக் கோரி தாக்கல் செய்த ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனுவின் விசாரணையின்போது, அந்தப் பெண் தன் கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்தபோது தனக்கு உதவிய காதலனுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாக அவர் தைரியமாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கின் சிறப்பம்சமாக, அந்தப் பெண்ணின் முடிவை அவரது பெற்றோரும், காதலனின் தாயாரும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர். நீதிமன்றம் அந்தப் பெண்ணின் மூன்று குழந்தைகளின் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்ததுடன், அவரது நகைகள் மற்றும் உடைமைகளைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டது.

விவாகரத்து நடைமுறைகள் முடியும் வரை அந்தப் பெண் தனது பெற்றோர் வீட்டில் இருக்க வேண்டும் என்றும், சட்டப்பூர்வமாகப் பிரிந்த பிறகு அவர் தனது விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சட்டமும் மனிதாபிமானமும் இணைந்து ஒரு பெண்ணின் உரிமையை நிலைநாட்டிய இந்தச் சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.