கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதாயி பகுதியில், மது போதையில் வாலிபர் ஒருவர் செய்த செயல் அப்பகுதி மக்களையே நிலைகுலைய வைத்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமிதுல் இஸ்லாம் (28) என்ற தொழிலாளி, தான் பிடித்து வைத்திருந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை, அசால்ட்டாகத் தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் சுருட்டி வைத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்தவரிடம் பெருமையாகத் தனது பாக்கெட்டில் இருந்த பாம்பை எடுத்து வெளியே காண்பித்துள்ளார். அப்போது அந்தப் பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அமிதுல் இஸ்லாமை பலமுறை கொத்தியது.
இதனால் நிலைதடுமாறி அவர் அலற, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மலப்புரம் வனத்துறையினர், அந்தப் பாம்பை பிடித்துச் சென்றனர். மது போதையில் விளையாட்டுத் தனமாக பாம்பை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஊர் சுற்றிய வாலிபரின் செயல், இப்போது கேரளா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
