உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சோபித் குப்தா என்பவருக்கும், அவரது மனைவி பூனம் குப்தாவிற்கும் இடையே பூனம் ஜிம்முக்குச் செல்வது தொடர்பாகத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. பூனம் ஜிம்முக்குச் செல்வதை சோபித் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பூனம் ஜிம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சோபித், இரும்பு கம்பியால் பூனத்தின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் பூனம் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு தப்பிச் செல்லாத சோபித், சுமார் 7 மணிநேரம் தனது மனைவியின் சடலத்தின் அருகிலேயே அமர்ந்துள்ளார். மதியம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனது மகளிடம், தாயின் சடலத்தைக் காட்டாமல் வேறு அறைக்கு அனுப்பி மறைத்துள்ளார். மாலை நேரத்தில் போலீஸாருக்குத் தானே போன் செய்து, தனது மனைவிக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாக நாடகமாடியுள்ளார்.
ஆனால், போலீஸாரின் தீவிர விசாரணையில் தான் செய்த கொலையை அவர் ஒப்புக்கொண்டார். இதற்கிடையே, பூனத்தின் உறவினர்கள் கூறுகையில், இது ஜிம் விவகாரத்தால் நடந்த கொலை மட்டுமல்ல என்றும், ஏற்கனவே பூனத்தை உணவில் கண்ணாடித் துகள்களைக் கலந்தும், விஷம் கொடுத்தும் அவரது குடும்பத்தினர் கொல்ல முயன்றதாக அதிர வைக்கும் புகாரை அளித்துள்ளனர். போலீஸார் சோபித்தை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
