சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், கண்ணகி நகர் மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தான் 15 வயது சிறுமியாக இருந்தபோது, டியூசன் சென்ற இடத்தில் பிராங்கிளீன் ராஜா என்பவர் தன்னை காதலிப்பதாகக் கூறி மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது அண்ணன் விக்டர் லிபின் ராஜாவிடம் முறையிட்டபோது, அவர் தம்பியைக் கண்டிப்பதற்குப் பதிலாக அவரும் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தற்போது திருமணமான நிலையில், மீண்டும் தன்னை தவறான உறவுக்கு அழைப்பதாகவும், மறுத்தால் பழைய புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக இருவரும் மிரட்டுவதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, கண்ணகி நகர் மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருந்தபோது நடந்த இந்தச் சம்பவம் என்பதால், சோழிங்கநல்லூரைச் சேர்ந்த விக்டர் லிபின் ராஜா மற்றும் பிராங்கிளீன் ராஜா ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகு துணிச்சலாக புகார் அளித்த பெண்ணின் நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.