விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தின் வீரியத்தால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் சம்பவ இடத்திலேயே 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஆலையின் 4 உற்பத்தி அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.