ரயில் பயணம் என்றாலே ஜன்னல் ஓர இருக்கை, கையில் ஒரு நாவல், மற்றும் வீட்டிலிருந்து கட்டி எடுத்து வந்த சுடச்சுட சாப்பாடு என ஒரு தனி சுகம் உண்டு. ஆனால், இப்போது அந்தச் சாப்பாடே உங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். ரயிலிலும், ரயில் நிலைய வளாகத்திலும் தூய்மையைப் பராமரிக்க ரயில்வே நிர்வாகம் தற்போது ‘ருத்ரதாண்டவம்’ ஆடி வருகிறது.
கிழக்கு ரயில்வே நடத்திய அதிரடி சோதனையில், ஒரே நாளில் மட்டும் குப்பை பரப்பியதற்காக 1,447 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 2,89,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹவுரா, அசன்சோல், மால்டா மற்றும் சீல்டா ஆகிய கோட்டங்களில் இந்த வேட்டை தீவிரமாக நடந்தது.
ரயிலில் பயணம் செய்த ஒரு குடும்பத்தினர், வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, மீதமான உணவையும் அதன் கழிவுகளையும் இருக்கைக்கு அருகிலேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டினர்.
“ரயில் நிலையத்தை அசுத்தம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று எச்சரித்துள்ள ரயில்வே நிர்வாகம், பயணிகள் தங்களின் கழிவுகளைச் சரியான இடத்தில் போட வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
