எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைக் குழுவுடனான சிக்கல்களால் தாமதமாகி வந்த நிலையில், தற்போது இணையதளங்களில் கசிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள நகைச்சுவை நடிகர் ‘கேபிஒய்’ பாலா, ஒரு படத்தை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதற்கு முன்பே சட்டவிரோதமாக வெளியிடுவது மிகப்பெரிய தவறு என்றும், இது அந்த நிறுவனத்திற்குப் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு பெரிய நடிகரின் படத்தைத் திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டமாகப் பார்ப்பதுதான் திருவிழாவைப் போன்றது என்றும், அந்தத் தருணத்திற்காகத் தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் பாலா குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படத்தின் கசிவைத் தடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பாலாவின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
