தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று கொங்கு மண்டலமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. ரசிகர் ஒருவர், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருடன் மறைந்த நடிகர் விஜயகாந்த் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பரிசாக வழங்கினார்.

இன்று சங்கீதாவின் பிறந்தநாள் என்பதால், அந்தப் புகைப்படத்தைப் பார்த்த விஜய், சில நொடிகள் அப்படியே உறைந்துபோய் எமோஷனலாக அதைப் பார்த்துக் கொண்டிருந்த வீடியோ இப்போது எக்ஸ் தளத்தில் தீயாய் பரவி வருகிறது. ​கடந்த 1999-ம் ஆண்டு திருமணமான இந்த நட்சத்திர தம்பதிக்கு இடையே தற்போது விவாகரத்து தொடர்பான சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தனது மனைவியின் பிறந்தநாளில் அவர் சம்பந்தப்பட்ட புகைப்படத்தை விஜய் வாங்கிய விதம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் குறித்துப் பேசப்பட்டு வரும் நிலையில், பிரச்சாரக் களத்தில் விஜய் காட்டிய இந்த எமோஷனல் ரியாக்ஷன் அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது.