கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 14ம் லியோ மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான மோதல் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த வார இறுதியில் வாடிகனில் உரையாற்றிய போப் லியோ, “தற்பெருமை மற்றும் வலிமையை வெளிக்காட்டியது போதும், முட்டாள்தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வர வேண்டும்” என அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.

இதனைத் தன்னை நோக்கிய விமர்சனமாக எடுத்துக்கொண்ட டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவாகச் சித்தரித்து ஏஐ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். மேலும், “போப் ஒரு ஆன்மீகத் தலைவரைப் போலன்றி, இடதுசாரி அரசியல்வாதி போலச் செயல்படுகிறார்; நான் அதிபராக இல்லாவிட்டால் அவர் போப்பாண்டவர் ஆகியிருக்கவே மாட்டார்” எனத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது கத்தோலிக்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டிரம்பின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள போப் லியோ, “நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ அல்லது உண்மைகளைப் பேசுவதற்கோ அஞ்சப்போவதில்லை. போர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், ஈரானிய அதிபர் மசூத் பெசெகியன் இந்த விவகாரத்தில் தலையிட்டு டிரம்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சமாதானத்தின் இறைத்தூதரான இயேசுவை அவமதிப்பது எந்தவொரு சுதந்திரமான மனிதனுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது; போப் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை ஈரான் வன்மையாகக் கண்டிக்கிறது” என அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானின் இந்தத் தலையீடு மற்றும் டிரம்பின் சர்ச்சை புகைப்படம் உலக அளவில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, அந்த ஏஐ புகைப்படத்தைத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்திலிருந்து டிரம்ப் தற்போது நீக்கியுள்ளார். இருப்பினும், வாடிகன் – அமெரிக்கா – ஈரான் என முக்கோண மோதலாக இது உருவெடுத்துள்ளது.