தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையேயான வார்த்தைப் போர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழிசையைத் தோற்கடித்து மீண்டும் கவர்னராக்கச் செய்வோம்” என உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு, மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான தமிழிசை தற்போது மிகக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். உதயநிதியின் கருத்துக்குப் பதிலளித்த அவர், வாரிசு அரசியலை மறைமுகமாகச் சாடும் வகையில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“நான் என் அப்பா தோள் மீது ஏறி அரசியல் செய்யவில்லை, அப்படிச் செய்திருந்தால் அது எனக்கு மிகச் சுலபமாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்த தமிழிசை, தான் கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகச் சேர்ந்து, மாநிலத் தலைவராகி, ஆளுநர் வரை உயர்ந்தது சாதாரண காரியமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

தனது ஒவ்வொரு வளர்ச்சியும் உழைப்பால் வந்தது என்றும், தனது வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். உதயநிதியின் கிண்டலுக்குத் தமிழிசை கொடுத்துள்ள இந்த ‘வெயிட்டான’ பதிலடி, குறிப்பாக மயிலாப்பூர் தொகுதி வாக்காளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக – பாஜக இடையேயான இந்த நேரடி மோதல் தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.