டெல்லியின் புராரி பகுதியில், தனது 11 வயது முதல் கடந்த 10 ஆண்டுகளாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தையை, ஆதாரங்களுடன் போலீசில் காட்டிக் கொடுத்துள்ளார் 21 வயது இளம்பெண் ஒருவர். கடந்த 2015-ம் ஆண்டு தாய் ஊரில் இல்லாத நேரத்தில் தொடங்கிய இந்த கொடூரம், அந்தப் பெண் வளர்ந்த பிறகும் தொடர்ந்துள்ளது.
இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண், 16 வயதில் தனது தாயிடம் இதுகுறித்து முறையிட்டும், தாய் அவரையே மிரட்டி வாயை மூடியுள்ளார். ஒரு கட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரிடம் உண்மையைச் சொன்னபோதும், தாயின் மிரட்டலால் அது ‘மனப்பிரமை’ என்று கூறி அந்தப் பெண் பின்வாங்க நேரிட்டது.
ஆனாலும் மனம் தளராத அந்தப் பெண், தனது தந்தையின் கொடூரச் செயல்களை உலகிற்கு நிரூபிக்கத் திட்டமிட்டார். சுமார் ஒரு வருட காலம் தனது அறையில் ரகசியமாக மொபைல் கேமராவை வைத்து, தந்தை செய்த அத்துமீறல்களை வீடியோ ஆதாரங்களாகச் சேகரித்தார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தனது தோழியின் உதவியுடன் காவல்துறையை அணுகி, அந்த வீடியோ ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் தற்போது அந்தத் தந்தையைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகளின் புகாரை மறைக்க முயன்ற தாயின் பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
