ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன் என உலகையே அச்சுறுத்தி வந்த எட்டு பெரும் போர்கள் கடந்த 72 மணிநேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளும் சீனாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒருவார காலத்திற்கு பரஸ்பரம் தாக்குதல் நடத்தப்போவதில்லை என உறுதி அளித்துள்ளன. மறுபுறம், ரஷ்ய அதிபர் புதின் ‘ஈஸ்டர்’ பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் எல்லையில் 32 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த அமைதிச் சூழல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியிருந்தாலும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு லெபனான் உடனான போரை ‘தனிப்பட்ட மோதல்’ என வகைப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்லாமாபாத் மற்றும் வாஷிங்டனில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மட்டுமே இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தங்கள் நிரந்தர அமைதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
