தமிழகச் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்காகப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக நிலமற்ற விவசாயிகளைக் கவரும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது அமலில் உள்ள பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே ஆண்டுக்கு ₹6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தில் விடுபட்ட நிலமற்ற விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
விவசாய கூலிகள் மற்றும் குத்தகை விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, தமிழகத்தில் 300 நாட்களில் 3 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் ‘யுனிவர்சல் பேசிக் இன்கம்’ (Universal Basic Income) போன்ற அதிரடித் திட்டங்களையும் காங்கிரஸ் முன்மொழிந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸின் இந்த வாக்குறுதிகள் விவசாய பெருமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
