கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட்புதரில் பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றிற்குள் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துத் தகவல் அறிந்து வந்த தென்தாமரைகுளம் காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி நடத்திய தீவிர விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயது நர்சிங் கல்லூரி மாணவி ரெஜினா என்பதும் திருநெல்வேலியைச் சேர்ந்த முகேஷ் என்பதும் காதலித்து வந்ததாலேயே இந்தக் குழந்தை பிறந்தது தெரியவந்தது.

திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால் சமூகப் பழிச்சொல்லுக்கு அஞ்சி இருவரும் இணைந்து குழந்தையைக் கொல்லத் திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது.

அதன்படி குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே அந்தப் பச்சிளம் குழந்தையைக் கொன்று ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் அடைத்து ஆள் நடமாட்டமற்ற முட்புதரில் வீசியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து நர்சிங் மாணவி ரெஜினா மற்றும் அவரது காதலன் முகேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை செய்தல் மற்றும் தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். பெற்ற தாயே குழந்தையைக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.