கேரள மாநிலத்தை சேர்ந்த முஹ்சீனா (37) என்ற பெண், தனது ஏழாவது பிரசவத்தின்போது முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு விநியோக ஊழியராகவும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பவராகவும் இருந்த இவரது கணவர் இப்ராகீம், முஹ்சீனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் பிறந்த ஆறாவது நாளிலேயே குழந்தை உயிரிழந்த நிலையில், சில நாட்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முஹ்சீனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.முஹ்சீனாவின் மரணத்திற்கு அவரது கணவரே காரணம் என்று உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிரசவத்திற்குப் பிறகு அவருக்கு உரிய நவீன சிகிச்சை அளிக்காமல், இப்ராகீம் அக்குபஞ்சர் சிகிச்சை அளித்ததாகவும், இதனால் முஹ்சீனாவின் உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மகளைப் பார்க்கப் பெற்றோரைக்கூட அவர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முஹ்சீனாவுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த நிலையில், தற்போது அவரும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
