தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தன் மீதான அரசியல் வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தவெக பாஜக தலைமையிலான கூட்டணியில் சேரப்போவதாகவும், 90 தொகுதிகள் மற்றும் 50-50 ஆட்சிப் பகிர்வு எனப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் பொய்ப் பிரச்சாரம் என்று அவர் விளக்கமளித்தார்.
“நாம் மக்களின் டீம்; மதச்சார்பற்ற கொள்கையிலும் சமூக நீதியிலும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்” என்று குறிப்பிட்ட அவர், தொண்டர்கள் இத்தகைய அவதூறுகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தங்கள் தலைவரை இழுக்கப் பல கோடிக்கணக்கான டீல்கள் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், விஜய் இன்று அதை முற்றிலுமாக மறுத்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தவெக தனித்துப் போட்டியிட்டுத் தனது தலைமையிலேயே ஆட்சியை அமைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், யாருக்காகவும் கொள்கைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் விஜய் தெளிவுபடுத்தினார்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற மாநிலத் தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட தகவல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விஜய்யின் இந்த உரை அமைந்திருந்தது.
