தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சேரப்போவதாகவும், துணை முதல்வர் பதவிக்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் பரவிய தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என்று மறுத்துள்ளார்.
“மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் தவெக எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது” என்று குறிப்பிட்ட விஜய், மக்களைக் குழப்பவே இதுபோன்ற பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், தவெக யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும், தனித்துப் போட்டியிட்டுத் தங்கள் தலைமையிலேயே ஆட்சியை அமைப்போம் என்றும் விஜய் உறுதிபடத் தெரிவித்தார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு எனத் தொடக்கத்தில் கூறப்பட்டாலும், தற்போது எவருக்காகவும் எதற்காகவும் கொள்கைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
“யார் என்ன அவதூறு பரப்பினாலும் அதை நம்ப வேண்டாம், நாம் நினைத்த இலக்கை நிச்சயம் அடைவோம்” என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ள விஜய்யின் இந்தப் பேச்சு, தமிழக அரசியலில் நிலவி வந்த கூட்டணி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
