மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பள்ளியில் பயின்று வரும் பத்து வயது சிறுமிக்கு கராத்தே பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக வயிற்றில் பலத்த அடி விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக அந்தச் சிறுமி உடனடியாக பாணேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கணையத்தில் திசுக்கட்டி வடிவிலான ஒரு அரிய வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய இந்த வகை புற்றுநோய் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சிறுமிக்கு எந்தவிதமான முன் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கராத்தே பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் மட்டுமே இந்த நோய் பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புற்றுநோய் நிபுணர் மருத்துவர் அமித் பாரஸ்னிஸ் தலைமையிலான குழுவினர் அந்தச் சிறுமிக்குச் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கணையத்தில் இருந்த புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மிகக் குறைந்த ரத்த இழப்புடன் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் சிறுமியின் உயிரும் கணையத்தின் செயல்பாடும் பாதுகாக்கப்பட்டுள்ளது. தற்போது முழுமையாகக் குணமடைந்த அந்தச் சிறுமி மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளார். கராத்தே பயிற்சியில் ஏற்பட்ட காயம் அந்தச் சிறுமிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து உயிரைக் காப்பாற்றியுள்ளது.