சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற வெறி இளைஞர்களிடையே எந்த அளவிற்கு முற்றியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகும். மகாராஷ்டிராவில் ஒரு வாலிபர், இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’  எடுப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் அடியில் திடீரென பாய்ந்து சாகசம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பேருந்தின் சக்கரங்களுக்கு மிக அருகில் அவர் சென்றதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இந்நிலையில் மரணத்தைப் பற்றிய பயமோ அல்லது சட்டத்தின் மீதான அச்சமோ துளியும் இல்லாமல், வெறும் சில ‘லைக்ஸ்’  மற்றும் பார்வைகளுக்காக தனது உயிரைப் பணையம் வைத்த இந்த வாலிபரின் செயல் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரின் பொறுப்பற்ற செயலைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். “இது சாகசம் அல்ல, தற்கொலை முயற்சி” என்றும், இது போன்ற செயல்கள் பேருந்து ஓட்டுநர்களுக்கும் மற்ற பொதுமக்களுக்கும் தேவையற்ற மன உளைச்சலையும் ஆபத்தையும் விளைவிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், புகழுக்காக உயிரைப் பணையம் வைக்கும் இத்தகைய போக்கு எதிர்காலத் தலைமுறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.