பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில் பெண் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரேபிடோ இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் மேற்கொண்டுள்ள விவேகமான முயற்சி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

 

பொதுவாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது வேகத்தடை அல்லது வாகனத்தை நிறுத்தும்போது ஏற்படும் உடல் ரீதியான தொடுதலைத் தவிர்ப்பதற்காக அந்த ஓட்டுநர் தனது முதுகில் ஒரு பையைத் தொங்கவிட்டுள்ளார். இது குறித்து அந்த வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் கேள்வி எழுப்பியபோது பெண் பயணிகள் சங்கடப்படக் கூடாது என்பதற்காகவே தாம் இந்த முறையைப் பின்பற்றுவதாக அந்த ஓட்டுநர் மனமுருகத் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்த இளைஞர் மேற்கொண்டுள்ள இந்தச் செயல் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு பிற வாகன ஓட்டுநர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.