தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் 36 முதல் 41 தொகுதிகள் வரை எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக தரப்பு 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த இழுபறிக்கு இடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், ராஜ்யசபா சீட் மற்றும் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு போன்ற கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸுடனான இந்த சந்திப்பு கூட்டணியை இறுதி செய்வதற்கான மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இரு தரப்பும் ஒருமித்த கருத்துக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகுமானால், அடுத்த சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
